விவசாயிகள் போராட்டத்தில் எதிர்கட்சிகள் பங்கேற்பு...

டெல்லி ஜந்தர் மந்தரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் எதிர்கட்சிகள் பங்கேற்றுள்ளன.   

விவசாயிகள் போராட்டத்தில் எதிர்கட்சிகள் பங்கேற்பு...

மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனை பாதிப்பதாக கூறி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 8 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு மத்திய அரசு செவிமடுக்காமல் இருந்து வருகிறது.

இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது தங்களது பிரச்னைகள் முன்வைக்கப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள் எதிர்கட்சிகளை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தன. அதுமட்டுமல்லாது மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நாடாளுமன்ற கட்டிடம் அருகிலுள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். 

இந்தநிலையில், தொடர்ச்சியாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்குபெறுவது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எதிர்கட்சியினர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்காரணமாக ஜந்தர் மந்தரில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சியினர் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ‘விவசாயிகளை காப்போம், இந்தியாவை காப்போம்’ என முழக்கமிட்டும் வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்பிக்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.