பஞ்சாபின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்பு

பஞ்சாப் மாநிலத்தின் முதல் பட்டியலின முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட சரண்ஜித் சிங் சன்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

பஞ்சாபின் புதிய முதலமைச்சராக  சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்பு

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனிடையே அமரிந்தர் இரு தினங்களுக்கு முன் திடீரென முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. அவரது அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வித்துறை அமைச்சராக இருந்த  சரண்ஜித் சிங் சன்னி, தற்போது புதிய முதல்வராக  ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இந்தநிலையில் சரண்ஜித் சிங்கின் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து ஆகியோர் கலந்து கொண்டு நேரில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஆனால் சித்து வருகையையொட்டி, பதவி ஏற்பு நிகழ்ச்சியை அமரிந்தர் சிங் புறக்கணித்ததாக தெரிகிறது.

இதனிடையே புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னிக்கு வாழ்த்து கூறியுள்ள பிரதமர் மோடி, பஞ்சாப் மக்களின் நலனுக்காக அம்மாநில அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.