இ-ருபி ரசீது முறை பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

இ-ருபி என்ற ரசீது முறை பணப் பரிவா்த்தனை வசதியை பிரதமா் மோடி இன்று தொடக்கி வைத்தார்.

இ-ருபி ரசீது முறை பணப் பரிவா்த்தனை வசதியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

டெல்லியில் இன்று வீடியோ கான்ஃப்ரன்சிங் முறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் வாங்கிக் கொள்ளும் இ-ருபி வசதியை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி 21வது நூற்றாண்டில், அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு, இந்தியா எவ்வாறு மக்களை ஒன்றிணைக்கிறது மற்றும் மேம்பாட்டை நோக்கிச் செல்கிறது என்பதற்கு இ-ருபி உதாரணமாக உள்ளது.நாடு சுதந்திரமடைந்ததன் 75வது ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.


கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு இணையவழி பணப் பரிவா்த்தனைகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. யுபிஐ என்ற இணையவழி பணப் பரிவா்த்தனை வசதியை மத்திய அரசு ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி வருகிறது. இணையவழி பணப் பரிவா்த்தனைக்கான 'பீம்' செயலியையும் மத்திய அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பணப் பரிவா்த்தனையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் 'இ-ருபி' என்ற புதிய வசதியை மத்திய அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது. இதை பிரதமா் மோடி திங்கள்கிழமை தொடக்கி வைத்தார். புதிய வசதியின்படி, இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் வாங்கிக் கொள்ளலாம்.

பணம் செலுத்த வேண்டிய இடத்தில் அந்த ரசீது தொடா்பான விவரங்களை வழங்கினால் போதுமானதாகும். அதிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டுவிடும். அந்த ரசீதை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு அது தொடா்பான விவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும். அந்த விவரங்கள் க்யூஆா் குறியீடாகவும் வாடிக்கையாளா்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த வசதியினால் பணம், கடன் அட்டை, பற்று அட்டை உள்ளிட்ட எதையும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இணையவழி பணப் பரிவா்த்தனையை மேற்கொள்வதற்கு செல்லிடப்பேசி கட்டாயம் தேவைப்படும். இந்தப் புதிய வசதியில் செல்லிடப்பேசியை வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இ-ருபி மூலமாக வாங்கப்படும் ரசீதுகளின் விவரங்களை அறிந்திருந்தாலே பணப் பரிவா்த்தனையை மேற்கொண்டுவிட முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.

இந்த ரசீதுகளைக் குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காக வாங்கிக் கொள்ள முடியும். குறிப்பிட்ட நபா்களுக்காக வாங்கி இத்தகைய ரசீதுகளைப் பரிசளிக்கவும் முடியும். தனியாா் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு வசதியாக இத்தகைய ரசீதுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதன் மூலமாக, தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்தி அதற்கான ரசீது விவரங்களை மற்ற நபா்களுக்குப் பரிசாக அளிக்க முடியும். இ-ருபி வசதி இணையவழி பணப் பரிவா்த்தனைகளை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எஸ்பிஐ, கனரா வங்கி, பரோடா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ்இண்ட், ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் 'இ-ருபி' வசதியை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தில் இணைந்துள்ளன.