130 கோடி இந்தியர்கள் சார்பில் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி...

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான நிதி இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

130 கோடி இந்தியர்கள் சார்பில் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி...

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, மருத்துவர்களுடன் பிரதமர் மோடி காணொலி  மூலம் கலந்துரையாடினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மருத்துவர்களின் உழைப்பு மிகச்சிறப்பானது என்று பேசிய அவர், இதற்காக 130 கோடி இந்தியர்கள் சார்பில் தாம் அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார். மேலும், மருத்துவர்களின் அறிவும், நிபுணத்துவமும் கொரோனா தொற்றின் கடினமான காலங்களில் நம் தேசத்தை காப்பாற்ற உதவியதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான நிதி இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த 50 ஆயிரம் கோடி கடன் திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களில் மருத்துவ உள்கட்டமைப்புகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், தற்போது நமது மருத்துவர்கள் கொரோனா தடுப்பிற்கான விதிமுறைகளை அவர்களாகவே வழங்குவதாக பெருமிதம் கொண்டார்.

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு இறப்பு விகிதத்தை கவனித்தால், வளர்ந்த நாடுகளை விட நமது நாடு சிறப்பாக முன்னேறி வருவதாகவும், நம்மால் பலரையும் காப்பாற்ற முடிந்தது என்ற பெருமை நமது மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களையே சார்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.