புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் புதிய வேளாண் சட்டத்தை திரும்பபெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, தலைநகர் டெல்லி எல்லையில் சுமார் 250 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள உச்சானா காலன் எனும் பகுதியில் மிகப்பெரிய டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் தேசிய கொடியை ஏற்றிவாறு டிராக்டர்களை ஓட்டி வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதேபோல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலும் விவசாயிகள் பேரணியாக சென்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். அட்டாரியில் இருந்து வாகா எல்லை வரை நடைபெற்ற கார் மற்றும் இருசக்கர வாகன பேரணியில் ஏராளமான விவசாயிகள் தேசிய கொடியுடன் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், வேளாண் சட்டங்களை நிரந்தரமாக திரும்பபெறும் வரை டெல்லியில் நடைபெறும் தங்களின் போராட்டம் ஓயாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.