உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாக கூறி ரூ. 1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு..தாய்மாமன் உட்பட 3 பேரை கைது செய்த போலீஸ்

காரைக்காலில் உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாக கூறி 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த, தாய்மாமன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாக கூறி ரூ. 1 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு..தாய்மாமன் உட்பட 3 பேரை கைது செய்த போலீஸ்

காரைக்கால் மாவட்டத்தில் போலியாக ஆவனம் தயாரித்து நிலமோசடி ஈடுபட்டுவரும் கும்பலின் அட்டுழியம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெடுங்காடு அன்னவாசல் சாலையை சேர்ந்த ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவரான,குமார ஆனந்த் என்பவர் கடந்த 1983 ம் ஆண்டு நெடுங்காடு அருகே உள்ள பருத்திக்குடியில் 15 ஏக்கர் விளைநிலத்தை வாங்கி உள்ளார்.

பின்னர் அவரது தாய்மாமா தேவராஜ் என்பவரிடம் நிலத்தை சாகுபடி செய்ய சொன்னதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் தேவராஜிக்கும், குமார்ஆனந்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தை சரிவர கவனிக்காமல் இருந்து வந்துள்ளார் தேவராஜ். ஆகையால் அந்த விளைநிலம் சாகுபடி செய்யாமல் தரிசு நிலமாக மாறியதாக சொல்லப்படுகிறது.

இதனைதொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு நிலத்தின் உரிமையாளர் குமார் ஆனந்த் இறந்து விட்டதாக கூறி போலியாக இறப்புச் சான்றிதழ் தயார் செய்தும்,  போலி உயில் தயார் செய்து ஒரு கோடி ரூபாய் மதிப் பிலான நிலத்தை  நெடுங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் மற்றும் ஜெயா ஆகியோர் பெயரில்  பத்திரப்பதிவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த நிலத்தின் உரிமையாளர் குமார் ஆனந்த் தனது உறவினரான குணசேகரன் என்பவர் மூலம் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன்சர்மா, சீனியர் எஸ். பி., நிகாரிகாபட் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தார். இதனை அடுத்து காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் ரகுநாயகம் தலைமையில் விசாரணை நடைபெற்றது.  விசாரணையில்   உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாக போலியாக இறப்பு சான்றிதழ் தயாரித்து, பத்திரப்பதிவு செய்திருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து நெடுங்காடு பகுதியை சேர்ந்த தேவராஜ், செய்யது, பாஸ்கர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த  காரைக்கால் சார்பதிவாளர் ஜெயக்குமார்,  இளங்கோவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.