கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதி...

பாலூட்டும் தாய்மார்களை தொடர்ந்து கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அனுமதி...

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்த நிலையில், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதில், பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது. இதனிடையே, கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்கும் விவகாரத்தை மத்திய அரசு பரிசீலித்து வந்தது.

இதையடுத்து தற்போது கர்ப்பிணிகளும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்ககம் அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவின் தளத்தில் பதிவு செய்த பின்னரோ, அருகிலுள்ள தடுப்பூசி முகாம்களுக்கு நேரில் சென்று பதிவு செய்த பின்னரோ தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசியால் கர்ப்பிணி பெண்களுக்கு சோர்வு, பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என எய்ம்ஸ் மருத்துவர்கள், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.