பாதுகாப்பு கருதி உக்ரைனில் இருந்து மாணவர்கள் அவரவர் தாயகம் செல்லுமாறு இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

முதலில் பாதுகாப்பு முக்கியம் என்பதால் உக்ரைனில் இருந்து மாணவர்கள் வெளியேறுமாறு இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு  கருதி உக்ரைனில் இருந்து மாணவர்கள் அவரவர் தாயகம் செல்லுமாறு  இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்

உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம் எனும் அச்சம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் உக்ரைனில் வாழும் அவரவர் நாட்டினரை மீண்டும் தங்கள் தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் உக்ரைன் தலைநகர் கேவி-ல் உள்ள இந்திய தூதரகம் உக்ரைனில் வாழும் இந்திய பிரஜைகள் மற்றும் மாணவர்களை உக்ரைனை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தி வருகிறது. 

இதன் அடிப்படையில் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உக்ரைனில் வாழும் இந்திய பிரஜைகளை தாயகம் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் மீண்டும் ஒரு அறிவிப்பை இந்திய தூதரகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உக்ரைனில் மருத்துவ படிப்பு பயிலும் இந்திய மாணவர்கள் ஆன்லைன் கல்வி முறையை தொடர்வதற்கு இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் உக்ரைனில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் இருப்பினும் மாணவர்களுடைய பாதுகாப்பு முக்கியம் என்பதால் பல்கலைக் கழகங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்காமல் தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உக்ரைன் இந்திய தூதரகம் தரப்பில் அவசர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உக்ரைன் நிலவரம் குறித்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.