ஆப்கானிஸ்தானில் அட்டூழியம் செய்யும் தலிபான்கள்: பெண்கள் புகைப்படங்களை தேடி பிடித்து அழிப்பு...

ஆப்கானிஸ்தானில் மக்களாட்சி நடைபெற வாய்ப்பு இல்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் அட்டூழியம் செய்யும் தலிபான்கள்: பெண்கள் புகைப்படங்களை தேடி பிடித்து அழிப்பு...

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து,  அந்நாட்டை தலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றி, ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளனர். மேலும் அடுத்த கட்ட முயற்சியாக நாட்டை ஆள்வது குறித்தும், கொண்டு வர வேண்டிய சட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவை இன்னும் இறுதியாகாத நிலையில், ஆப்கானை தலிபான்கள் கவுன்சில் ஆட்சி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை செய்தியாளர்களுக்கு தெரிவித்த தலிபான்களின் மூத்த உறுப்பினர் வஹீத்துல்லா ஹாஷிமி, நாட்டில் ஜனநாயகப்போக்கிற்கு கண்டிப்பாக வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் ஷரியா சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது தலிபான் படையுடன், அந்நாட்டு ராணுவம் மற்றும் விமானிகள் இணைந்து, புதிய ஆட்சிக்கு வழிவகுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

இதனிடையே அங்கு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களும் தலைதூக்க தொடங்கியுள்ளது.  அண்மையில் சாலையில்  துப்பாக்கியுடன் வலம் வந்த தலிபான்கள் சிலர், பெண் ஒருவர் ஆடம்பர செருப்பு அணிந்திருந்ததை கண்டு, அவரை சிறை பிடித்தனர். பின்னர் அவரை முன்னிறுத்தி இஸ்லாமிய விதிகள் பற்றி உரையாற்றிய தலிபான்கள், யாரும் எதிர்பாராத விதமாக திடீரென சுட்டுக்கொன்றனர்.

இதேபோல் சாலையில் நடந்து சென்ற அப்பாவி மக்களை பிடித்து, தலிபான்கள் சிலர் துப்பாக்கியை காட்டி மிரட்டி, தெருவோரம் மண்டியிட செய்வதும், மிரட்டுவதும் போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.தலிபான்களிடம் இருந்து தப்பிக்க காபூல் விமான நிலையம் வந்த தம்பதி, கூட்ட நெரிசலுக்கு மத்தியில், தங்களது குழந்தையை அங்கிருந்தவர்களிடம் கொடுத்துள்ளனர். அந்த குழந்தை ஒவ்வொரு கைக்கும் சென்று, இறுதியாக காபூல் நுழைவாயிலுக்கு எதிர் பகுதியில் இருந்த நபரிடம் கொடுக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்பட்டது.

இதேபோல் ஆப்கானிஸ்தானில் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க ராணுவத்திடம், தலிபான்கள் நெருங்குவதை குறிப்பிட்டு, பெண்கள் தங்களை மீட்கும்படி கெஞ்சிய வீடியோவும் வெளியாகியுள்ளது.