ரூ.10 ஆயிரம் வாடகை தரமுடியாத ஏழை குடும்பம்: கொரோனா பாதித்த உடலை நடைபாதையில் வைத்து சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்...

ரூ.10 ஆயிரம்  வாடகை தரமுடியாத ஏழை குடும்பம்:  கொரோனா பாதித்த உடலை நடைபாதையில் வைத்து சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர்...

10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்காததால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்த தொழிலாளியின் உடலை நடைபாதையில் ஆம்புலன்ஸ் டிரைவர் வைத்து விட்டு சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். பின்னர் தொழிலாளியின் உடலை, அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்து தகனம் செய்ய முடிவு செய்தார்கள்.

இதையடுத்து, ஆஸ்பத்திரியில் இருந்து ஹெப்பால் மின்மயானத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தொழிலாளியின் உடலை, அவரது மனைவி கொண்டு சென்றார். மின்மயானம் அருகே வைத்து 10 ஆயிரம்  ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும் என்று ஓட்டுநர் கேட்டுள்ளார்.

 ஆனால் தன்னிடம். ரூ.3 ஆயிரம் இருப்பதாகவும், மீதி பணத்தை யாரிடமாவது வாங்கி கொடுப்பதாகவும் தொழிலாளியின் மனைவி கூறியுள்ளார். இதனை ஏற்க ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்ததுடன், தனக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் தொழிலாளியின் உடலை மயானம் அருகே உள்ள நடைபாதையில் வைத்துவிட்டு டிரைவர் சென்றுவிட்டார். இதுபற்றி மயானம் அருகே இருந்தவர்களிடம் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.