இஸ்ரேல் - ஹமாஸ் போா் நீடிப்பு...அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போாில் உயிாிழந்தோாின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 800-யை கடந்துள்ளது. 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போா் கடந்த 15 நாட்களாக தொடா்ந்து நீடித்து வருகிறது. இதில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை ஆயிரத்து 405 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 4 ஆயிரத்து 385 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.

காசாமுனை மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், வடக்கு காசா மற்றும் காசா நகரில் உள்ள பொதுமக்கள் உடனடியாக காசாவின் தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் கடந்த சில நாட்களாக எச்சரித்து வருகிறது. இந்நிலையில், காசா நகரில் இருப்பவர்கள் அல்லது காசா நகருக்கு திரும்பி வருபவர்கள் பயங்கரவாதிகளாக கருத்தப்படுவர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடா்ந்து போர் நீடித்து வரும் நிலையில் நிவாரண உதவிக்காக காசாமுனை உடனான ரபா எல்லையை எகிப்து திறந்துள்ளது. இந்த எல்லை வழியாக முதற்கட்டமாக 20 லாரிகளில் நிவாரண உதவி பொருட்கள் காசாமுனைக்குள் நுழைந்துள்ளன. மருந்து, உணவுப்பொருட்கள் என பல்வேறு நிவாரண உதவிகள் எகிப்து வழியாக காசாமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவிக் கரம் நீட்டவேண்டும் என உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் ரஃபா எல்லை வழியாக அதிக அளவில் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்ல பாலஸ்தீனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நிவாரண உதவிகளில் காசாவுக்குள் எரிபொருள் கொண்டுசெல்ல அனுமதியில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும்வரை பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்வது குறித்த பேச்சுக்கு இடமில்ல என ஹமாஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி தலால் அல் - ஹிந்டி, அவரது மனைவி உள்பட குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.