காவல்துறை மீதான பொதுமக்களின் தவறான பிம்பம் மாற்றப்பட வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

காவல்துறை மீதான பொதுமக்களின் தவறான பிம்பம் மாற்றப்பட வேண்டும் என, ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

காவல்துறை மீதான பொதுமக்களின் தவறான பிம்பம் மாற்றப்பட வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகள் உடன், டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பேரிடர் காலங்களில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்துவிட்டால் தாங்கள் காப்பாற்றப்படுவோம் என மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும், அதே போன்ற நம்பிக்கையும் மரியாதையும் காவல்துறை மீது ஏன் வரவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வாறான அடையாளத்தை மாற்றுவது இளம் அதிகாரிகளின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசாரின் பங்கை எடுத்துரைக்க வேண்டும் என்றும், சிறந்த நடவடிக்கையின் அவசியத்தை அடிக்கோடிட்டு காண்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கொரோனா ஆரம்ப காலத்தில் ஏழைகள் மற்றும் தேவைப்படுவோருக்கு உதவி செய்ததன் மூலம், போலீசார் மீதான மக்களின் பார்வை சற்று மாறியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், நவீன காலத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவற்றை தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.