அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம்.....

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்துள்ளார்

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வேல்ராஜ் நியமனம்.....

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா கடந்த ஏப்ரல் 11-ம் தேதி பணி ஓய்வு பெற்ற நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், அவற்றிலிருந்து 10 பேரைத் தேர்வு செய்து நேற்றைய தினம் தேடல் குழு நேர்காணல் நடத்தியது.

நேர்காணல் முடிவில் தகுதியான 3 பேரை ஆளுநருக்கு தேடல் குழு பரிந்துரைத்த நிலையில், தற்போது வேல்ராஜை புதிய துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ், அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 1992-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

தற்சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் மைய இயக்குநராக உள்ள வேல்ராஜ் விரைவில் துணைவேந்தராக பொறுப்பேற்பார் என்றும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக பணியில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 193 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள அவர் தேசிய அளவிலான மாநாடுகளில் 31 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 3 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். மெக்கானிக்கல் பிஹெச்டியில் மூன்று பிரிவுகளையும், முதுநிலை படிப்புகளில் 9 பிரிவுகளையும் புதிதாக உருவாக்கியவர்.  

ஏற்கனவே கடந்த முறை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்ட போது, வெளிமாநிலத்தவர் என்று எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.