40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண்ணுக்கு இடம்: நமச்சிவாயம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பதவியேற்பு

புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் நமச்சிவாயம் உள்ளிட்ட 5 அமைச்சர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண்ணுக்கு இடம்: நமச்சிவாயம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பதவியேற்பு

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் என்.ஆர். காங்கிரஸுக்கு 3 அமைச்சர்களும், பாஜகவுக்கு 2 அமைச்சர்களும் என அமைச்சர் பதவிகளுக்கான பங்கீடு முடிந்து, பெயர் பட்டியலை முதல்வர் ரங்கசாமி கடந்த 23-ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து பதவியேற்பு விழா இன்று எளிய முறையில் நடைபெற்றது.

இதில், துணைநிலை ஆளுநர் தமிழிசை பங்கேற்று பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர்களான லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், காரைக்காலைச் சேர்ந்த சந்திர பிரியங்கா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். மேலும், பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ சாய் சரவணக்குமார் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். 

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் பெண்ணு ஒருவருக்கு இடம் கொடுத்த முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேணுகா அப்பாதுரை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாய் சரவணன் குமார் முதன் முறையாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.