5 முறை செல்போனை மாற்றியும் கூட ஒட்டுக்கேட்பு பிரச்னை ஓயவில்லை : பிரசாந்த் கிஷோர் அதிர்ச்சி

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், தமது செல்போனை இதுவரை ஐந்து முறை மாற்றியும்கூட, ஒட்டுக்கேட்பு பிரச்னை ஓயவில்லை  என்று தேர்தல் வியூக  வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

5 முறை செல்போனை மாற்றியும் கூட ஒட்டுக்கேட்பு பிரச்னை ஓயவில்லை : பிரசாந்த் கிஷோர் அதிர்ச்சி
இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகளும் பயங்கரவாதத் தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை இந்தியா அந்த உளவு மென்பொருளைக் கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
 
அதில் முக்கியமாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் போனும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.பிரசாந்த் கிஷோரின் தொலைபேசியை கடந்த ஜூன் மாதத்தில் 14 நாட்களும், ஜூலை மாதத்தில் 12 நாட்களும் ஒட்டுக்கேட்டுள்ளனர். காங்கிரஸ்  எம்.பி., ராகுல், பொதுச்செயலர் பிரியங்காவை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசிய 13-ம் தேதியும் அவரின் போன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது.

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், '2017 முதல் 2021 வரையில் தமது  மொபைலில்  ஒட்டுக்கேட்பு நடப்பதை உணரவில்லை என்றும் இந்த காலக்கட்டத்தில் 5 முறை போனை மாற்றிவிட்டாலும், ஒட்டுக்கேட்பு பிரச்னை ஓயவில்லை என்றும்  கூறியுள்ளார். தமது தொலைபேசியை ஹேக் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.