புறம்போக்கு நிலங்களை பட்டா மாறுதல் செய்து மோசடி.. அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

அதிமுக ஆட்சியில் அரசுப் புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர், நில அளவையர் உள்பட மூன்று நபர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.

புறம்போக்கு நிலங்களை பட்டா மாறுதல் செய்து மோசடி.. அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்திருப்பதாகப் புகார் எழுந்தது. இந்த நில மோசடி தொடர்பாக பெரியகுளம் துணை ஆட்சியர் நடத்திய விசாரணையில், 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ஏறக்குறைய 180 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக,  பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர்களாக பணிபுரிந்த ஆனந்தி, ஜெயப்பிரிதா, பெரியகுளம் வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்தினமாலா, மண்டல துணை வட்டாட்சியர்கள் சஞ்சீவ் காந்தி, மோகன்ராம், நில அளவையர்கள் பிச்சை மணி, சக்திவேல், நில அளவையர் உதவியாளர்கள் அழகர், ராஜேஷ் கண்ணன், அரசு நிலத்திற்கு பட்டா மாறுதல் பெற்ற அதிமுக முன்னாள் பிரமுகர் அன்னபிரகாஷ் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  

இதற்கிடையே, பட்டா மாறுதலில் நடைபெற்ற மோசடி தொடர்பான இந்த வழக்கு கடந்த ஜனவரி 4ம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, நில மோசடியில் தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.