பற்றாக்குறை இல்லா பட்ஜெட் சாத்தியம் - ஐகோர்ட்!

பற்றாக்குறை இல்லா பட்ஜெட் சாத்தியம் - ஐகோர்ட்!

இந்து சமய அறநிலையத்துறை கோவில் சொத்துகளின் வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்புத் தொடர்பான வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜராகி, விளக்கம் அளிக்கப்பட்டது. கோவில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தமிழக தணிக்கை துறை தலைவர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமாக 5. 82லட்சம்  ஏக்கர் நிலங்களில் 3.79 லட்சம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், கூறப்பட்டது. இதனை கேட்டறந்த நீதிபதிகள், கணக்கு தணிக்கைக்கு  ஒருவர் தலைமையில் 5 அலுவலர்கள் கொண்ட குழு போதாது என்றும், குறைந்தபட்சம்  15 தணிக்கையாளர்கள் உள்ள குழுவை அமைக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினர்.

அறநிலையத்துறை கோவில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியார் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். கோவில் நிலங்களை மீட்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றவும், கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் உறுதிபட தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை மூன்று வாரங்ளுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.