தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட்கள்...! பூட்டு போட்டு சீல் வைத்த அதிகாரிகள்..!

திருவண்ணாமலையில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த வழக்கில் உரிய அபராதம் கட்டாமல் அலை கழித்து வந்த பிரபல மோர் சூப்பர் மார்க்கெட் மற்றும் பூம்புகார் சூப்பர் மார்க்கெட் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  பூட்டு போட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.  

தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்த சூப்பர் மார்க்கெட்கள்...! பூட்டு போட்டு சீல் வைத்த அதிகாரிகள்..!

திருவண்ணாமலை தேரடி வீதியில் இயங்கி வந்த பூம்புகார் சூப்பர் மார்க்கெட் சமையல் எண்ணெய் மற்றும் கல் உப்பு ஆகியவை தரமற்ற முறையில் விற்பனை செய்ததாக 3 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல திருவண்ணாமலை திருவூடல் வீதியில் அமைந்துள்ள மோர் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தரமற்ற சர்க்கரை விற்பனை செய்த வழக்கில் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் அபராத தொகையை முறையாக செலுத்தாமல் அலை கழித்து வந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி ராமகிருஷ்ணன்  தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இரண்டு சூப்பர் மார்க்கெட்டுக்கும் பூட்டு போட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ராமகிருஷ்ணன், இரண்டு நிறுவனங்களிலும்  உணவு மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொண்ட போது உணவு தரமில்லாமல் இருந்ததால் அந்த கடைகளுக்கு அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.  

அபராதம் விதித்தும் இதுவரை கட்டாமல் உள்ளதாகவும் திருவண்ணாமலை நகராட்சியில் 7 லட்ச ரூபாய் வரை அபராத தொகை நிலுவையில் உள்ளது எனவும், குறிப்பாக பூம்புகார் சூப்பர் மார்க்கெட் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், மோர் சூப்பர் மார்க்கெட் 1 லட்ச ரூபாயும் அபராதம் கட்டாமல் இருந்தால் அவர்களுக்கு தேவையான போதிய கால அவகாசம் அளித்தும் அபராத தொகையை கட்ட மறுத்ததால் தற்போது இரண்டு கடைகளுக்கு சீல் வைத்ததாகவும், தற்போது இரண்டு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அபராத தொகையை செலுத்திய பின்னரே கடையின் உரிமம் அளிக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.