போலி மின்னஞ்சல் மூலம் அவதூறு பரப்பிய வழக்கு....யூ-டியூபர் மாரிதாஸூக்கு 1 நாள் போலீஸ் காவல்....!!

போலி மின்னஞ்சல் மூலம் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் யூ-டியூபர் மாரிதாஸை விசாரிக்க சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு 1 நாள் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது.

போலி மின்னஞ்சல் மூலம்  அவதூறு பரப்பிய வழக்கு....யூ-டியூபர் மாரிதாஸூக்கு 1 நாள் போலீஸ் காவல்....!!

யூ-டியூபர் மாரிதாஸ் "Maridas Answers" என்ற தனது யூ-டியூப் பக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதுடன், அந்நிறுவனத்தின் நிர்வாகி அனுப்பியதாக போலி மின்னஞ்சல் ஒன்றைக் காட்டி குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி வினய் சரவோகி உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அப்புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் யூ-டியூபர் மாரிதாஸை இவ்வழக்கில் கடந்த 11 ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 27 ஆம் தேதி வரை நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக யூ-டியூபர் மாரிதாஸிடம் விசாரணை நடத்தும் பொருட்டு ஒரு நாள் காவல் கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து யூ-டியூபர் மாரிதாஸ் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்த ஒரு நாள் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதனடிப்படையில் மருத்துவப் பரிசோதனை முடிந்து சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் வைத்து மாரிதாஸ் விசாரிக்கப்படுவார் எனவும், அதனைத் தொடர்ந்து விசாரணை முடித்து நாளை மாலை 5 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாகவும் மாரிதாஸ் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.