உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க., ஜெ.தீபா வட்டாரம் : வேதா இல்லம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

வேதா இல்லத்தை அரசுடமை ஆக்கியது செல்லாது என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க., ஜெ.தீபா வட்டாரம் : வேதா இல்லம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வேதா இல்லத்தை அரசுடமையாக்க நிலம் கையகப்படுத்திய அறிவிப்பு, அரசாணை ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்டார். இதனையடுத்து வேதா இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தீபா, தீபக் ஆகிய இருவரிடம் வழங்கினார். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேலுமுறையீடு செய்ய அனுமதி அளிக்கக்கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குக் தொடர்ந்தார். இந்த மனு 20ஆம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

வழக்கு விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில் சிவி சண்முகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அதிமுகவினரிடையே உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வேதா இல்லத்துக்குள் தீபா சென்ற நிலையில் அவருக்கும் வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பது குறித்த அச்சம் நிலவி வருகிறது.