அமலாக்கத்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜி மிரட்டியதாக புகார்!

அமலாக்கத்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜி மிரட்டியதாக புகார்!

அமலாக்கத்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜி மிரட்டியதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-2016 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும் தற்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்நிலையில், சுமார் 18 மணி நேரம் நீடித்த சோதனையின் நிறைவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறை அலுவலர்கள் கைது செய்தனர். இந்நிலையில் அவரது கைது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதில், செந்தில் பாலாஜி கணக்கில் 1.34கோடி மற்றும் மனைவி மேகலா கணக்கில் 28.55 லட்சம் இருப்பதாக வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்துள்ளார். ஆனால், வருமான வரித்துறையில் காண்பித்த கணக்கை விட பல மடங்கு செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா வங்கி கணக்கில் இருப்பதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  

மேலும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பொய்யாக நம்பிக்கையை அளித்து பணம் பெற்றது விசாரணையில் தெரிய வந்ததாகவும், அதன் அடிப்படையில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சோதனையின் போது முறையாக விசாரணைக்கு ஒத்துழைக்காமல், அதிகாரத்தை பயன்படுத்தி அமலாக்கத்துறை அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்மன் கடிதத்தில் கையெழுத்திடாமல் செந்தில் பாலாஜி அலைக்கழித்ததால் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல குற்றவாளிகளுக்கு தொடர்பிருப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை வெளியே விட்டால் அதிகாரத்தை பயன்படுத்தி ஆதாரங்களை அழிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது எனவும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:அத்தியாவசிய தேவைக்காக ஆபத்தான பயணம்!