ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.  

ஊரடங்கு நீட்டிப்பு  குறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள், கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் தியேட்டர்கள் திறப்பு தொடர்பாக கருத்து கேட்க உள்ளார். 

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, ஏற்கனவே, நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுகிறதா? அல்லது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றனவா? என்பது குறித்த முக்கிய அறிவிப்பை, அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.