மழை வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்...அவதியில் பொதுமக்கள்!

மழை வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்...அவதியில் பொதுமக்கள்!

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஜிபி ரோட்டில் மழைநீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடியவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தென் இந்திய பகுதிகளில் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியானது நிலவி வருகிறது. இதன் காரணமாக, அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் நேற்றிலிருந்து கோயம்பேடு, வடபழனி, அண்ணாசாலை, எழும்பூர், அண்ணா சதுக்கம் , கிண்டி, எண்ணூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பொழிந்து வருகிறது. இதனால் சென்னையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

இதையும் படிக்க : 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’... சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள ஜிபி ரோடு சாலை முழுவதும் முழங்கால் அளவிற்கு மழை நீரானது தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், இந்த பகுதியில் இருந்து வரக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் வரும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் சிக்கி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும், சென்னை மாநகராட்சி இதை எதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி இப்பகுதியில் மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்து வருவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. 

எனவே, இது குறித்து குற்றம் சாட்டும் பொதுமக்கள், சென்னையில் மழையானது தொடர்ந்து ஐந்து நாட்கள் இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தும் கூட, மாநகராட்சி இதுபோன்று அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும், பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும், ஆனால், இதுவரையிலும் மழை நீரை அகற்றி சுத்தம் செய்யமால் அதிகாரிகள் இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து, தண்ணீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் தொடக்கத்திலேயே தடுப்புகள் போட்டு வரமுடியாதவாரு செய்து இருந்தால் இவ்வளவு சிரமம் இல்லை எனவும் ஆட்டோ ஓட்டுனர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.