அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: மருத்துவமனைக்கே வந்த நீதிபதி!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: மருத்துவமனைக்கே வந்த நீதிபதி!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், நீதிபதி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார்.

நேற்று காலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது  செய்யப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அமைச்சர்கள் பலரும், செந்தில் பாலாஜியின் இத்தகைய நிலைக்கு காரணம், அமலாக்கத்துறையின் நெருக்கடி தான் என கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது தொடர்பாக, அவரது மனைவி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும் சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்தார், செந்தில் பாலாஜியின் மனைவி. இந்த வழக்கை, நீதிபதிகள் எம். சுந்தர், சக்திவேல் அமர்வில், பிற்பகலில் விசாரணை நடத்தவிருந்த நிலையில், தற்போது நீதிபதி சக்தி வேல் அந்த அமர்வில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார். அதனால், மனுவை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். 

இந்நிலையில், நீதிபதி அல்லி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்து, அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடுவதற்காக, மருத்துவமனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.