"தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இலங்கையுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்" எல்.முருகன்!!

எம்ஜிஆர் திரையில் பாடினார், ஆனால் அதை நிறைவேற்றியவர் மோடி என இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.

சாகர் பரிக்ரமா  திட்டத்தின் மூலம்  மீனவர்களிடம் கலந்துரையாடல் மற்றும் கருத்து கேட்கும் நிகழ்ச்சி கடலூர் துறைமுகம் புதிய மீன்பிடி இறங்குதளத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை, பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபலா மற்றும் மத்திய மீன்வளம் மற்றும் பால்வளத்துறை தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மீனவர்களின் கோரிக்கை மனுக்கள் மற்றும் கருத்துகளை கேட்டறிந்தனர். பின்னர் மீனவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின் மூலம் கடனுதவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் எம்ஜிஆரின் திரைப்பாடலான தரை மேல் பிறக்க வைத்தாய் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தாய் என்ற பாடலை சுட்டிக்காட்டி எம்ஜிஆர் திரையில் பாடினார் மீனவர்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து அதை நிறைவேற்றியவர் மோடி என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எல்.முருகன், " கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி குளச்சல் பகுதியில் கப்பல் மூழ்கிய துயரமான சம்பவம் நடந்தது. இதில் மூன்று மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் முதன்முறையாக கடற்படையை பயன்படுத்துகிறோம். இதன் மூலம் தற்போது ஒரு உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனக் கூறியுள்ளார்.

மேலும், மீனவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக சாத்திய கூறுகள் குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது எனக் கூறிய அவர், எல்லை தாண்டி மீன் பிடிப்பது தொடர்பாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு,  இது இரண்டு நாடுகளுக்கு இடையே ஆன பிரச்சனை இங்குள்ள மீனவர்கள் அங்கு சென்று மீன் பிடிக்கும் பொழுது இலங்கை கடற்படை கைது செய்வது அவர்களை வெளியுறவுத்துறை மூலம் மீட்பது தொடர்கிறது எனவும் இதனை தடுக்க மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் நாட்டுப் படகை மாற்றி விட்டு ஒரு கோடியே 30 லட்சம் மதிப்புள்ள ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் கப்பல்களை.60% மானியத்துடன் கொடுத்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.

மீனவர்களை மீட்பது போல் அவர்களின் படகுகளை மீட்பதில்லை ஏன் என்ற கேள்விக்கு, "இது இரண்டு நாட்டுடைய பிரச்சனை இதற்காக ஒரு ஒருங்கிணைந்த குழு உள்ளது. இதில் இலங்கை மீன்வளத்துறை செயலாளர், இந்திய மீன்வளத்துறை செயலாளர், வெளியுறவுத்துறை செயலாளர் ஆகியோர் உள்ள கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம்" எனவும் "இலங்கையில் தற்போதுள்ள சூழல் காரணமாக அமைச்சர் அளவில் நடைபெற இருந்த கூட்டம் தற்பொழுது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த கூட்டங்கள் வாயிலாக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தொடர்ந்து வெளியுறவு துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.