சலூன் கடைகளில் பட்டியலினத்தவருக்கு முடி திருத்த மறுப்பு!! ஏன் இது போன்ற பாகுபாடு ? என கேள்வி

சலூன் கடைகளில் பட்டியலினத்தவருக்கு முடி திருத்த மறுப்பு!! ஏன் இது போன்ற பாகுபாடு ? என கேள்வி

முடி திருத்தும் கடைகளில் பட்டியல் சமூகத்தினருக்கு முடி திருத்த மறுப்பதாக தொடரப்பட்ட வழக்கில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 

புதுப்பட்டி கிராமத்தில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இதில் 150 குடும்பங்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் 3 முடி திருத்தும் நிலையங்களிலும், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்படுவதில்லை என குற்றம்சாட்டி இருந்தார்.

வழக்கை விசாரித்த  நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய பிரச்சினை தான் என கருத்து தெரிவித்துள்ளனர். 

குறிப்பிட்ட சமூகத்திற்கு என பிரத்யேகமான முடி திருத்தும் நிலையம் உள்ளதா?  என்றும், ஏன் இது போன்ற பாகுபாடு உள்ளது? எனவும் கேள்வி எழுப்பினர். 

மேலும், வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.