மேலூர் : ஸ்ரீ நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா...! 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன்...!

மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில், ஆடி உற்சவ விழாவையொட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலூர் : ஸ்ரீ நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா...!  3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன்...!

மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ நாகம்மாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், ஆடிமாதம் கடைசி செவ்வாய் தொடங்கி மூன்று நாட்கள் ஆடி உற்சவ விழா நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் இந்த ஆண்டு, 58ம் ஆண்டு உற்சவ விழா நடத்தப்பட்டது. அதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன் காப்புகட்டுதலுடன் இந்த பாரம்பரிய விழா தொடங்கியது.

விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை சக்தி கரகமும், அதனைத் தொடர்ந்து, காப்பு கட்டி விரதம் இருந்து வந்த சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலூர் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து தொடங்கிய இந்த பால்குட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகளான, நகைக்கடை பஜார், பெரியகடை வீதி, செக்கடி பஜார் வழியாக வந்து பின்னர் நாகம்மாள் கோவிலை வந்தடைந்ததது.

இதையடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய பால், நாகம்மாளுக்குக்கு மின் மோட்டார் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அம்மனை வழிபாட்டு சென்றனர். மேலும், நாகம்மாள் கோவிலின் முக்கிய நிகழ்வாக நாளை  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பெண்கள் பங்கேற்கும்,முளைப்பாரி மற்றும் பூத்தட்டு ஊர்வலமும், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.