பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு...!

குன்னூர் அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகைக்கு தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்றில் 54 பேர் சுற்றுலா சென்றிருந்தனர். பல்வேறு பகுதிகளை பார்வையிட்ட பின்னர் மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக புறப்பட்ட அந்த பேருந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டோர் குன்னூர் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதையும் படிக்க : வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு...!

பேருந்தில் சிக்கியவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் இரவு நேரத்தில் டார்ச் உள்ளிட்ட மின் விளக்கு உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வசதியாக இலவச உதவி எண்ணை மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல், படுகாயம் அடைந்தோருக்கு ஒரு லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.