ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி.. விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை!!

கோத்தகிரி அருகே, ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி.. விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேல் ஆடுபெட்டு, செட்டியார் மடம், ஓமக்குளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களுக்கு கோத்தகிரியில் இருந்து அரசு மற்றும் தனியார் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அரவேனுவில் இருந்து ஆடுபெட்டு கிராமத்துக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்ததால்,  புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாலைப் பணி தொடங்கியது. மேலும் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க சிறிய ரக வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், கிராமங்களுக்கு செல்ல பாதையின்றி கிராம மக்கள் தவித்து வருகின்றனர். அத்துடன், பேருந்து மற்றும் அவசரத் தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள்  செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.