உலக மரங்கள் தினத்தில் மாணவர்கள் உலக சாதனை!!

உலக மரங்கள் தினத்தில் மாணவர்கள் உலக சாதனை!!

ராஜபாளையத்தில் உலக மரங்கள் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் கையில் மரக்கன்றுகளை ஏந்தியவாறு உலக சாதனை படைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உலக மரங்கள் தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியாளர் அய்யப்பன் ஏற்பாட்டில் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. அனைவரும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும், உலக வெப்பமயமாதலில் இருந்து பூமியை காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.

தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 9ம் வகுப்பு பயிலும் 14 வயது மாணவர் கமலேஷ் குமார் முதல் உலக சாதனை நிகழ்த்தினார். ஒற்றைக்காலில் நின்று, ஒரு கையில் மரக்கன்றை ஏந்திய நிலையில், மறு கையால் பந்தை தரையில் தட்டியவாறு 1ம் எண் முதல் ஆயிரமாவது எண் வரை 8.41 நிமிடங்களில் ஆங்கிலத்தில் தலைகீழாக கூறியுள்ளார்.

அடுத்ததாக 1ம் வகுப்பு பயிலும் 5 வயது மாணவி தியா ஶ்ரீ மரக்கன்றை கையில் ஏந்தியவாறு, ஒரு நிமிடத்தில் 73 முறை சைடு சிட் அப் செய்து சாதனை நிகழ்த்தினார்.

கமலேஷ் குமார் மற்றும் தியா ஶ்ரீ க்கு நோபல் உலக சாதனை அமைப்பின் நடுவர்கள் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினர்.

ஜீலை 28 உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு குழு சாதனை நிகழ்ச்சிக்காக நேற்று மேடையில் வைத்து 100 நபர்களுக்கு, அவர்கள் விரும்பிய மரக் கன்றுகள் வழங்கப்பட்டது. 100 நபர்களும் மரங்களை நட்டு வரும் 30 நாட்கள் தண்ணீர் ஊற்றி பராமரிப்பதை புகைப்படங்கள் மூலம் உலக சாதனை அமைப்புக்கு அனுப்பி வைப்பார்கள்.

30 நாட்களும் தொடர்ச்சியாக தடையின்றி மரங்களை பராமரிப்பது உறுதி செய்யப்பட்டால், அன்றைய தினம் குழு சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்படும் என நோபில் உலக சாதனை அமைப்பின் நடுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஆகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரும் 'மிதவை உணவக கப்பல்' !