தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதா... விவாதிக்க கோரிய டி.ஆர்.பாலு...

தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதா... விவாதிக்க கோரிய டி.ஆர்.பாலு...

தமிழகத்தில், நீட் விலக்கினை அமல்படுத்த கோரி, கடந்த சட்டப்பேரைவை கூட்டத்தொடரின் போது மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மேலும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்க கோரப்பட்டது. ஆனால் மசோதா நிறைவேற்றப்பட்டு மூன்று மாதங்களாகியும், இன்னும் குடியரசு தலைவர் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் இன்றைய கூட்டத்தொடரின் போது மக்களவை அலுவல்களை ஒதுக்கி வைத்து விட்டு அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என கோரி திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் 17வது நாள்  கூட்டம் தொடங்கியதும், டி.ஆர். பாலு நீட் விலக்கு கோரிக்கையை முன்வைத்து பேசினார்.  மேலும் தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு மசோதாவுக்கு, உடனடி ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.  அதுமட்டுமல்லாது கடந்த செப்டம்பர் மாதமே நீட் விலக்கு தொடர்பான மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இதனால் தமிழக அரசு கொண்டு வந்த மசோதாவானது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படாமல் இருப்பதாகவும் கூறினார். அதனைத்தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில்,தொடர் அமளி நிலவியதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.