முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்..!

எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்ற பெருந்தகை அவ்வை நடராஜன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்..!

முதுபெரும் தமிழறிஞர் மறைவு 

முதுபெரும் தமிழறிஞர் அவ்வை நடராஜன், சென்னையில் நேற்று காலமானார், அவருக்கு வயது 85. கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவ்வை நடராஜன் நேற்று காலமானார். முதுபெரும் தமிழறிஞரான அவ்வை நடராஜன், 1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தார். 

பத்ம ஸ்ரீ அவ்வை நடராஜன்

மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி அனுபவம் கொண்ட அவர், டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 2011ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி இருந்தது.

முதலமைச்சர் இரங்கல் செய்தி 

அவ்வை நடராஜன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்ற பெருந்தகை அவ்வை நடராஜனின் மறைவு, தமிழ்த் துறையினருக்கு பேரிழப்பாகும் எனக் கூறியிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நளினி விடுதலையில் காங்கிரஸ் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்...!!

இதே போல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் அவ்வை நடராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.