தொடங்கியது காங்கிரஸின் இளம் பேச்சாளருக்கான தேடல்...!!

தொடங்கியது காங்கிரஸின் இளம் பேச்சாளருக்கான தேடல்...!!

"இளம் இந்தியாவிற்கு சொல்லுங்கள்" என்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கான மூன்றாவது சீசன் இலச்சினையுடன் கூடிய விளம்பர அட்டையை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சிராக் சிங் பர்பர் வெளியிட்டனர்.

சென்னை இராயபேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் "இளம் இந்தியாவிற்கு சொல்லுங்கள்" என்ற நேர்காணல் நிகழ்ச்சிக்கான தொடக்கம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சிராக் சிங் பர்மர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் பேசிய போது, அண்ணல் அம்பேத்கர், தொழிலாளர்கள் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கப்படுவதற்கு போராடினார். ஆனால் மீண்டும் அதனை 12 மணி நேர பணி நேரத்தை அதிகப்படுத்துவது வேதனையளிக்கிறது எனத் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து இந்திய இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சிராக் சிங் பர்மர் பேசியதாவது,'' 'இளம் இந்தியாவிற்கு சொல்லுங்கள்' சீசன் 3 தற்போது தொடங்கப்பட்டு உள்ளது. இது ராகுல் காந்தியின் மிகப்பெரிய கனவு நிகழ்ச்சியாகும் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் முன்னிலையில் காங்கிரஸ் பேச்சாளராக பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் இதன் மூலம் இளைஞர்கள் நாட்டின் பிரச்சனைகள் மக்கள் குரலாக பேச முடியும்'' எனக் கூறினார்.

மேலும், மாவட்ட அளவில், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் என மூன்று பகுதிகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் எனவும் மாவட்ட அளவில் மட்டும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் மாநில அளவில் மற்றும் தேசிய அளவில்  நேரடியாக நடைபெற இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தேசிய அளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்த முறை ராகுல் காந்தி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.