"எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை" ஓ.பி.எஸ் திட்டவட்டம்!

"எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை" ஓ.பி.எஸ் திட்டவட்டம்!

எடப்பாடி பழனிச்சாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை என ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓ.பி.எஸ். ஆதரவு மாவட்ட செயலாளர்களின் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக 76 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்திருந்தால் தமிழ்நாட்டிற்கு நல்ல காலம் பிறந்திருக்கும் என்றார். நான்கு ஆண்டு காலத்தில் எந்த அளவுக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்களோ, அந்த அளவுக்கு துரோகங்கள் இழைக்கப்பட்டதாக கூறினார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொங்கு மண்டல மாநாடு குறித்த தேதி விரைவில் அறிக்கப்படும் என்று கூறினார். பாஜக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நேரம் வந்த பிறகு கூட்டணி குறித்து பேசுவோம் என்றார். கொங்கு மண்டலத்தில் இபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை என்பது ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவித்தார்.

ஓ.பி.எஸ்., திமுகவின் B டீம் என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எடப்பாடி பழனிசாமி தான் திமுகவுடன் மிகுந்த நெருக்கமாக இருக்கிறார் என்றார். தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை குறைத்து மதிப்பிடுவதற்கு அரசியல் ரீதியாக யாருக்கும் தைரியம் இல்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:"மேயராக இருந்தபோது, 9 மேம்பாலங்களை கட்டி முடித்தேன்" மு.க.ஸ்டாலின் பெருமிதம்!