”திருநாவுக்கரசர் கொள்கை இல்லாதவர்” - கே.பி. முனுசாமி.

”திருநாவுக்கரசர் கொள்கை இல்லாதவர்”  - கே.பி. முனுசாமி.

அதிமுகவால் அடையாளம் காணப்பட்ட திருநாவுக்கரசர் கொள்கை இல்லாதவர் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக சார்பில் வருகின்ற 20ம்தேதி மதுரையில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு ஒசூரில் இருந்து தொடர் ஜோதி ஒட்டம் நடைபெற்று வருகிறது. இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதிக்கு வந்த தொடர் ஜோதி ஓட்டத்தை அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி வரவேற்றும் வழி அனுப்பியும் வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி கூறியதாவது:-

திருநாவுக்கரசர் என்பவர்  எம்ஜிஆர் அவர்களால் அடையாளம் காணப்பட்டவர் அவரை சமூகத்தில் யார் என்பதை முன் நிறுத்தியது  அதிமுக தான். அன்றைய தினம் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கப்பட்ட போது மறுநாளே கருணாநிதிக்கு எதிராக பேட்டியளித்த திருநாவுக்கரசரின் வாய் இன்று மாற்றி பேசுகிறது. இவர் எப்படி ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியும். பொதுவாக கொள்கை பரப்பு உள்ளவர்கள் ஒரு முறை ஒரு கருத்தை தெரிவித்தால் அதில் உறுதியாக இருப்பார்கள் ஆனால் திருநாவுக்கரசர் போன்ற பதவி ஆசை மோகத்தில் இருப்பவர்களுக்கு நிலையான தலைவர் என்பது கிடையாது. எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சியில் சேர்ந்து விடுவார்கள். கொள்கை என்பதே கிடையாது.

 திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகிறது ஆனால் இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை இதிலிருந்து திமுக என்பது மக்களை ஏமாற்றி ஆட்சி செய்யக்கூடிய ஒரு கட்சியாக உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
 
நீர் விலக்கு மசோதா நிறைவேற்றம் என்பது மத்திய அரசும் ,மாநில அரசும் சேர்ந்து முடிவு செய்வது, ஆனால் இரண்டு அரசுகளும் வெவ்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருவதால் நீட் விலக்கு   தொடர்ந்து இழுப்பறியில் உள்ளது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத் தரக்கூடிய இடத்தில் திமுக உள்ளது. ஆனால் திமுக தலைவர் கடிதம் எழுதுகிறேன் என்று கூறி வருகிறாரே தவிர தண்ணீரை பெற்று தர எந்தவிதமான அழுத்தத்தையும், நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி அளித்தால் தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விடுகிறேன் என்று கர்நாடக மாநில துணை முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல நம்முடைய தமிழ்நாட்டின் முதல்வரும் தண்ணீர் திறந்து விட்டால் கூட்டணியில் தொடர்வேன் என உறுதியாக இருக்காமல் தமிழக மாநில மக்களை ஏமாற்றி சந்தர்ப்பவாதியாக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என தெரிவித்தார்.

இதையும் படிக்க   | ஐஐடி மாணவர்கள் விவகாரம்: அறிக்கையை சமர்ப்பித்தது திலகவதி தலைமையிலான குழு..!