”சொந்த நலனை கருதாமல் தொண்டர்களின் நலனை வைத்து செயல்பட வேண்டும்” - விஜயபாஸ்கர் பேட்டி!

சொந்த நலன் என்பதை தாண்டி கட்சி நலனை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட்டால் தற்போது உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

”சொந்த நலனை கருதாமல் தொண்டர்களின் நலனை வைத்து செயல்பட வேண்டும்” - விஜயபாஸ்கர் பேட்டி!

புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் முன்னாள் தமிழக சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவலாக இருப்பதால் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக என்பது நேற்று மழையில் முளைத்த காளான் அல்ல, நெருப்பாற்றில் நீந்தி வந்த கழகம் என்றும், இன்றைக்கு மட்டுமில்லாமல் இதுபோன்ற பல இன்னல்களை இக்கழகம் எதிர்கொண்டு வந்துள்ளது. இதனால் தற்பொழுது உள்ள இந்த சிறு பிரச்சனைகளையெல்லாம் தாண்டி ஆளுங்கட்சியாக அனைத்திந்திய அண்ணா திமுக வரும். அதில் யாருக்கும் எந்த மாற்றமும் வேண்டியதில்லை என்றும் கூறினார். 

மேலும், அதிமுகவில் ஒரு வலுவான ஒற்றை தலைமை வேண்டும் என்று, 99 சதவீதத்திற்கும் மேலான மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களில் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி கொண்டு இருக்கின்றனர். அதிமுகவின் எல்லா தொண்டர்களின் விருப்பமும், எண்ணமும் இதுதான். அதுமட்டுமில்லாமல் ஒற்றை தலைமைக்கு தகுந்தவராக அவர்கள் நினைப்பது எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியாரை தான். அவர் தான் ஒற்றை தலைமையை ஏற்கவேண்டும் என்று எல்லோரும் விரும்புகின்றார்கள்.

ஆதலால், இந்த நேரத்தில் தன் சொந்த நலன் என்பதை தாண்டி கட்சி நலனை மனதில் கொண்டு, அதிமுக தொண்டர்களின் நலனை மனதில் கொண்டு செயல்பட்டால் தற்போது உள்ள பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்றார். இறுதியாக திட்டமிட்டபடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடியார் தலைமையில் எந்தவித பிரச்சினையும் இன்றி மக்கள் இயக்கமாக கண்டிப்பாக அதிமுக இயங்கும் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.