புதுமைப்பெண் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் - கெஜ்ரிவால் உரை!

புதுமைப்பெண் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் - கெஜ்ரிவால் உரை!

மாணவிகளின் கல்வி இடைநிற்றலை தடுக்கும் தமிழக அரசின் புரட்சிகரமான புதுமைப்பெண் திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

டெல்லி முதலமைச்சர்:

சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற விழாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டம் உட்பட 3 முக்கிய திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தகைசால், சீர்மிகு பள்ளிகளை திறந்து வைத்தார். 

அரவிந்த் கெஜ்ரிவால் உரை:

அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய கெஜ்ரிவால்,  ஒரு சமுதாயத்தின் அடிப்படையே ஆசிரியர்கள் தான் என குறிப்பிட்டார். மேலும் புதுமைப்பெண் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்து வருவதற்காக தமிழக முதலமைச்சரை பாராட்டிய கெஜ்ரிவால், ஒரு மாநில முதல்வர் மற்றொரு மாநில பள்ளிகள், மருத்துவமனைகளை ஆய்வு செய்து அதனை தனது மாநிலத்திலும் அறிமுகம் செய்வேன் என கூறியது வியக்க வைத்ததாகவும் தெரிவித்தார். டெல்லியைப் போல் தகைசால் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள் தமிழ்நாட்டிலும் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 

இதையும் படிக்க: பொதுக்குழு வழக்கு: நீதிபதிகளின் தீர்ப்பு விருப்பத்தின் படியா..? சட்டத்தின்படியா?

கெஜ்ரிவால் வேதனை:

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த அரசுகள் நல்ல முன்னெடுப்புகளை எடுத்துவருவதாக கூறிய அவர், பிற மாநிலங்களிடம் காணப்படும் சிறந்த விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்தியா முழுவதும் புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். டெல்லி, தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரிய வகையில் இருப்பதாகவும் கெஜ்ரிவால் வேதனை தெரிவித்தார். 

தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறி:

மாநிலங்களில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இல்லாவிடில் தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறி ஆகிவிடும் என்றும், மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும் என்றும் கூறினார். 

முன்னதாக,  புதுமைப்பெண் திட்டம் அறிமுகத்தை முன்னிட்டு, இன்று தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் மாணவிகளுக்கு முதலமைச்சரின் இத்திட்டம் சார்ந்த வாழ்த்து மடல் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.