முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்ட சிபிஐ... தாமதித்த ஆளுநர்... கடிதம் எழுதிய சட்ட அமைச்சர்!

முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்ட சிபிஐ... தாமதித்த ஆளுநர்... கடிதம் எழுதிய சட்ட அமைச்சர்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு ஆளுநர் அனுமதியளிக்க சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.

மின், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது துறைகளை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்தும் செந்தில் பாலாஜி துறைகள் ஒதுக்கப்படாத அமைச்சராக நீடிப்பார் என்றும் முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுருந்தார். பின்னர் 4 மணி நேரத்தில் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும் ஆளுநர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இதனால் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த ஆளுநர் மற்றும் முதலமைச்சர்களிடையேயான பனிப்போர் மேலும் வீரியமடைந்துள்ளது. தினம் தினம் திமுகவினர் புதிய புதிய வாசகங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவதும் அமைச்சர்கள் ஆளுநரை நோக்கி கேள்வி எழுப்புவதும் முன்னெப்போதையும் விட அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,  ஊழல் வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கிட அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட கோப்புகள் நீண்ட காலமாக பதிலளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.

அதன்படி, முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க இசைவு கோரி மத்திய புலனாய்வு அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளிக்குமாறு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார். 

அதேபோல், இரண்டு குற்றச்சாட்டுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் முன்னாள் அமைச்சர்கள் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு கேட்டு அனுப்பபியுள்ள கடிதத்திற்கும் பதில் அளிக்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுதவிர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதைக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ரகுபதி, அவற்றின்மீதும் தனி கவனம் செலுத்தி விரைவில் இசைவு மற்றும் ஒப்புதல்களை அளிக்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:புதுச்சேரியில் பெருகி வரும் இணைய வழி மோசடி!