இலங்கையில் அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்...!

இலங்கையில் அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்...!

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினால் பெரும்பாலான இடங்களில் அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், அவரசர உதவி எண் 1990க்கு அழைப்பதை தவிர்க்குமாறு அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை:

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில், கடந்த சில மாதங்களாகவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. நாள் கணக்கில் காத்திருந்து எரிபொருளை வாங்கிச் செல்லும் சூழலே தற்போது வரை நீடிக்கிறது. இதனால் பேருந்து போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி கடும் பொருளாதார நெருக்கடிக்கு மக்கள் உள்ளானதால், இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் இருவரையும் பதவி விலக கோரி அங்குள்ள மக்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். அதன்படி முதலில் இருந்த பிரதமர் மகிந்திர ராஜ்பக்சே பதவி விலகினார். இதனையடுத்து அடுத்த பிரதமராக விக்கிரமரணில் சிங்கே பிரதமராக பதவியேற்றார். அதன்பின்பும் பொருளாதார ரீதியில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை.

மிகப்பெரிய திரளான போராட்டத்தை கையில் எடுத்த மக்கள்:

இதனால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான இலங்கை மக்கள் கடந்த 9 ஆம் தேதியன்று தலைநகர் கொழும்புவில் உள்ள காலித்திடல் மைதானத்தில் மிகப்பெரிய திரளான போராட்டத்தை கையில் எடுத்தனர். அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலகவேண்டும் என்று மக்கள் போர்க்குரல் கொடுத்தனர். பின்பு திரளான மக்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்:

இந்நிலையில், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் அவசர உதவி எண்ணான 1990க்கு அழைப்பதை தவிர்க்குமாறு அங்குள்ள ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ன. அதன்படி, மட்டக்களப்பு, அனுராதபுரம், அம்பாந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.