ரஷ்யா செல்லும் பொருட்களை தடுக்கும் லிதுவேனியா... பதிலடி மிகக் கடுமையாக இருக்கும் - ரஷ்யா எச்சரிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்ட பொருட்களுடன், ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதிக்குச் செல்லும் சரக்குகளை தடுத்த லிதுவேனியாவுக்கு, ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யா செல்லும் பொருட்களை தடுக்கும் லிதுவேனியா... பதிலடி மிகக் கடுமையாக இருக்கும் - ரஷ்யா எச்சரிக்கை

ரஷ்யாவுக்கான நிலக்கரி, கட்டுமானப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை, ரஷ்ய பகுதிக்குள் நுழைய விடாமல் லிதுவேனியா தடுத்து நிறுத்தியுள்ளது.

இதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைப்படி நடந்து கொள்வதாக லிதுவேனியா வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த போக்கு மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும் என்றும், லிதுவேனியாவுக்கான பதிலடி மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். குறிப்பிட்ட நாட்களுக்குள் சரக்குகள் ரஷ்யாவை சென்றடையா விட்டால், நாட்டின் நலன் கருதி ரஷ்யா நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதே நிலை தொடர்ந்தால், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான லிதுவேனியா மீதும், ரஷ்யா தாக்குதலைத் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து உறுப்பு நாடுகளுக்கு ஆதரவாக நேட்டோ களமிறங்கினால், 3வது உலகப் போர் மூள்வது உறுதி என்ற அபாய நிலையும் உருவாகியுள்ளது.