"ஜிஎஸ்டி-யால் நம்பிக்கை அதிகரித்துள்ளது" பிரதமா் மோடி பெருமிதம்!

"ஜிஎஸ்டி-யால் நம்பிக்கை அதிகரித்துள்ளது" பிரதமா் மோடி பெருமிதம்!

உலக அளவில் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக பிரதமா் மோடி பெருமிதம் தொிவித்துள்ளாா்.

இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-வது மாநாடு வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இம்மாநாட்டில் விவாதிப்பதாக கூறப்பட்டது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகர் சென்றடைந்தார். அப்போது பாரம்பரிய நடனத்துடன் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து குழந்தைகள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரின் மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அவா் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில், இந்தியாவில் ஜிஎஸ்டி, திவால் மற்றும் திவால் குறியீடு அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது எனக் கூறியுள்ளார். சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் மற்றும் பச்சை ஹைட்ரஜன் ஆகிய துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவா், இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரமாக இருக்கும். ஏனென்றால், இந்தியா பேரிடர் மற்றும் கடினமான காலங்களை பொருளாதார சீர்திருத்தங்களாக மாற்றியது என கூறிய மோடி, இந்தியாவில் அனைத்து நிலைகளிலும் UPI பயன்படுத்தப்படுகிறது என்றும், உலக அளவில் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்ட நாடாக இந்தியா திகழ்வதாக பெருமிதம் தொிவித்துள்ளார்.

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது என குறிப்பிட்ட பிரதமா் மோடி, விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும், வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவித்துள்ளார்.