உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தும் ரஷ்யா.. நாளொன்றுக்கு ரூ.6,900 கோடி செலவு எனத் தகவல்!

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு நாளொன்றுக்கு 6 ஆயிரத்து 900 கோடி ரூபாயை ரஷ்யா செலவழித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தும் ரஷ்யா.. நாளொன்றுக்கு ரூ.6,900 கோடி செலவு எனத் தகவல்!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கி இன்றுடன் 74 நாட்கள் ஆன நிலையிலும் தாக்கம் குறையாமல் உள்ளது. லட்சக்கணக்கான உக்ரைனிய பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் நாடே உருக்குலைந்து கிடக்கிறது.

இந்தநிலையில் ரஷ்யாவும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. போர் விமானங்கள், கப்பல், ஹெலிகாப்டர், கவச வாகனம் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தளவாடங் களையும் ஏராளமான வீரர்களையும் இழந்துள்ளது. ஆனாலும் விடாமல் உக்ரைனை தாக்கி வருகிறது.

இந்தநிலையில், உக்ரைனின் பிரபல பத்திரிகையான "தி கீவ் இண்டிப்பெண்ட்"  வெளியிட்டுள்ள செய்தியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் செய்திட நாளொன்றுக்கு 900 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் "ஆறாயிரத்து தொள்ளாயிரத்தி இருபத்தி ஐந்து கோடியே தொண்ணூற்றி ஐந்து லட்ச ரூபாய் செலவிடுவதாக  குறிப்பிட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்ய வீரர்களுக்கு ஊதியம், இழப்பீடு வழங்குதல்,  அதிக அளவு ஆயுதங்களை அனுப்புதல், ஆயுத உற்பத்தி மற்றும் போரில் சேதமடைந்த வாகனங்களை சரி செய்தல் போன்ற அனைத்துச் செலவுகளையும் உள்ளடக்கி இந்த தொகை செலவிடப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.