டொனெட்ஸ்கை குறிவைத்த ரஷ்யா.. மக்கள் பாதுகாப்பாக வெளியேற அறிவுறுத்தல்!!

லுஹான்ஸ்க்கைத் தொடர்ந்து டொனெட்ஸ்க் பகுதியை குறி வைத்து ரஷ்ய படைகள் முன்னேறிவருவதால்,  அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறி விடுமாறு உக்ரைன் அறிவித்துள்ளது.

டொனெட்ஸ்கை குறிவைத்த ரஷ்யா.. மக்கள் பாதுகாப்பாக வெளியேற அறிவுறுத்தல்!!

டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றி கிரீமியாவுடன் இணைத்து, கிழக்கு உக்ரைனை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் போர் வியூகத்தை மாற்றிய பின்னர் ரஷ்யாவுக்கு தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது.

டான்பாஸ் எல்லைக்குள் நுழைவதற்கு வசதியாக முதலில் மரியுபோல் நகரைக் கைப்பற்றிய ரஷ்ய படைகள், தொடர்ந்து நேற்று முன்தினம் லுஹான்ஸ்க் மண்டலத்தை தங்கள் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதனை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த நிலையில் எஞ்சியிருக்கும் டொனெட்ஸ்க் பகுதியை குறி வைத்து தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இடைவெளியில்லாமல் தாக்குதல் நடத்தப்படுவதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அங்குள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி, ஒலித்துக் கொண்டே இருக்கும் நிலை உள்ளதாகவும், இனியாவது மேற்குலக நாடுகள் நவீன வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.