விண்வெளித்துறையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் – நாசா குற்றச்சாட்டு – சீனா மறுப்பு

விண்வெளித்துறையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் – நாசா குற்றச்சாட்டு – சீனா மறுப்பு

விண்வெளி ஆய்வில் சீனாவின் ராணுவத்திட்டம் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு தலைவர் பில் நெல்சன் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில், சந்திரனை ஆய்வு செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி, சீனா தனது விண்வெளித் திட்டத்தின் வேகத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  கடந்த 2013ம் ஆண்டில் சீனா தனது முதல் ஆளில்லா விண்கலனை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கியது. தற்போது சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் நாடு திட்டமிட்டு கொண்டிருப்பதாக தெரிய வருகிறது.


நாசா எச்சரிக்கை :


நிலவில் விண்வெளி நிலையம் அமைப்பதற்கு சீனா கவலைப்பட வேண்டும் எனவும், சீனாவின் விண்வெளித் திட்டம் ஒரு இராணுவத் திட்டம் என்றும் நாசா எச்சரித்துள்ளது. அந்த நாடு மற்றவர்களிடமிருந்து யோசனைகளையும் தொழில்நுட்பத்தையும் திருடியதாகவும் நாசாவின் தலைவர் பில் நெல்சன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், 2035 ஆம் ஆண்டில், சீனா நிலவில்  தனது சொந்த நிலையத்தின் கட்டுமானத்தை முடித்து, ஒரு வருடம் கழித்து சோதனைகளைத் தொடங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.


சீனா விளக்கம்:


நாசாவின் இந்த அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் மறுத்துள்ளது. உண்மைகளை அறியாது சீனாவைப் பற்றி இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நாசா பேசுவது இது முதல் முறை அல்ல என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜான் விளக்கமளித்துள்ளார்.
மேலும், சீனாவின் இயல்பான மற்றும் நியாயமான விண்வெளி முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கத் தரப்பு தொடர்ந்து  தவறான தகவலைக் கட்டமைத்து வருவதாகவும், அத்தகைய பொறுப்பற்ற கருத்துகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் லிஜான் கூறியுள்ளார்.


விண்வெளியில் மனிதகுலத்திற்கான எதிர்காலத்தை உருவாக்குவதையே சீனா  ஊக்குவித்து வருவதாகவும், அதனுடன் ஆயுதமயமாக்கல் மற்றும் விண்வெளியில் எந்தவொரு ஆயுதப் போட்டியையும் சீனா எதிர்ப்பதாகவும் லிஜான் மேலும் கூறியுள்ளார்.