வெடிகுண்டு தாக்குதலில் 7 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்!

வெடிகுண்டு தாக்குதலில் 7 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்!

அமைதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்து கொலம்பியாவின் குடியரசுத் தலைவராக சமீபத்தில் குஸ்டாவோ பெட்ரோ பதவியேற்ற பின்னர், பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிகக் கொடிய தாக்குதல் இதுவாகும்.

காவல்துறையினர் படுகொலை

மேற்கு கொலம்பியாவில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில் குறைந்தது ஏழு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். கொலம்பியாவில் ஏறக்குறைய 60 ஆண்டுகாலமாக நடைபெறும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்தார் பெட்ரோ. அவர் பதவியேற்றதிலிருந்து பாதுகாப்புப் படைகள் மீது நடைபெற்ற மிக மோசமான தாக்குதல் இது என்று கொலம்பிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

அமைதியை சீர்குலைக்கும் நாசவேலை

இந்தச் செயல்கள் முழு அமைதிக்கு எதிரான நாசவேலை. விசாரணையை மேற்கொள்வதற்காக அந்த பகுதிக்கு செல்லுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளதாக பெட்ரோ கூறினார்.

எம்-19 கிளர்ச்சி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான பெட்ரோ, கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகள் (FARC) போராளிகளுக்கு 2016 அமைதி உடன்படிக்கையைப் பயன்படுத்தி, தேசிய விடுதலை படையின் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதன் மூலம் முழுமையான அமைதியை கொண்டுவர உறுதியளித்துள்ளார்.

காவல்துறை விசாரணை

பெட்ரோவுக்கு முன் குடியரசுத் தலைவராக பதவி வகித்த இவான் டியூக், 2019 ஆம் ஆண்டு பொகோட்டாவில் உள்ள ஒரு போலீஸ் பயிற்சிப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் இறந்ததைத் தொடர்ந்து தேசிய விடுதலைப் படையுடனான அமைதிப் பேச்சுக்களை முறித்துக் கொண்டார்.

இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் யார் என்பது தெரியவில்லை. எனினும் கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படையின் போராளிகள் சிலரின் செயற்பாடுகள் அங்கு காணப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் வேறு ஏதேனும் போதை கடத்தல் குழுக்களின் வேலையா இது என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலம்பியாவின் அரசாங்கம், கிளர்ச்சியாளர்கள், துணை இராணுவ குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் ஆகியோருக்கு இடையே நடந்த சண்டையில், 1985 - 2018 ஆண்டுகளுக்கு இடையில் மட்டும் 4,50,000பேர் கொல்லப்பட்டுள்ளனர்.