சோமாலியா விடுதி முற்றுகை...106 பணயக் கைதிகள்...களத்தில் இறங்கிய அரச படைகள்!

சோமாலியில் 30 மணி நேர சண்டையில் 21 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

சோமாலியா விடுதி முற்றுகை...106 பணயக் கைதிகள்...களத்தில் இறங்கிய அரச படைகள்!

ஆகஸ்ட் 21 அன்று ஒரு கொடிய தாக்குதலை சோமாலிய அதிகாரிகள் முடிவுக்குக் கொண்டுவந்தனர். இதில் 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். துப்பாக்கி ஏந்திய நபர்கள் சோமாலிய தலைநகரில் உள்ள தங்கும் விடுதியில் நுழைந்தனர்.

ஆகஸ்ட் 19 அன்று மாலை சோமாலியா நாட்டில் உள்ள ஹயாத் தங்கும் விடுதியை சில ஆயுதம் தரித்த நபர்கள் தாக்கி விடுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்தத் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர சோமாலிய அரச படைகளுக்கு 30 மணி நேரத்திற்கும் மேலானது.

முற்றுகை நள்ளிரவில் முடிவுக்கு வந்ததாக காவல்துறை ஆணையர் அப்டி ஹசன் ஹிஜார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நள்ளிரவில் முடிவடைந்த இந்த சுற்றிவளைப்பின் போது குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மொத்தம் 106 பேர் மீட்கப்பட்டதாக அவர் கூறினார்.

சோமாலியா சுகாதார அமைச்சர் அலி ஹாஜி ஆதம் 21 பேர் இறந்ததாகவும், 117 பேர் காயமடைந்ததாகவும், குறைந்தது 15 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அறிவித்தார். தாக்குதல் எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் இன்னும் விரிவான விளக்கத்தை அளிக்கவில்லை, எத்தனை ஆயுததாரிகள் தங்கும் விடுதிக்குள் நுழைந்தார்கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.