அரசு பேருந்துகள் மீது தாக்குதல்; நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு.. கடலூரில் நடப்பது என்ன?

அரசு பேருந்துகள் மீது தாக்குதல்; நூற்றுக்கணக்கான போலீசார் குவிப்பு.. கடலூரில் நடப்பது என்ன?

கடலூர் மாவட்டத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்தியதோடு, என்.எல்.சி. நிறுவனம் சுரங்க விரிவாக்கத்துக்கான பணியை தொடங்கியதால், பயிர்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றது.

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் - என்ற பாரதியின் வரிகள் போல், "தனியொரு நிறுவனத்துக்கு நிலமில்லையெனில், விவசாய நிலங்களை அழித்திடுவோம்" என புதிய வரிகளை அமைத்து, கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனம், சுரங்க விரிவாக்க பணிகளுக்காக விளை நிலங்கள் மீது குறி வைத்தது. இதற்காக வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்பதை அறிந்த விவசாயிகள் தற்போது வரை உயிரை கையில் பிடித்து காத்திருந்தனர். அப்படியே நிலத்தை கையகப்படுத்தினாலும், கூடுதல் இழப்பீடு தர வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

ஆனால், கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் மக்களை நடுத்தெருவில் நிறுத்தியது என்.எல்.சி.நிர்வாகம். ஆம், என்.எல்.சி. நிறுவனத்தின் ஆணையை ஏற்ற அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரத்துடன் வந்திறங்கினர்.

வளையமாதேவி கிராமத்தில் பச்சைப் பசேல் என வளர்ந்த பயிர்களின் நடுவே இறங்கிய ஜே.சி.பி எந்திரங்கள், வளர்ந்திருந்த பயிர்களை கொத்துக் கொத்தாய் பிடுங்கிப் போட்டதைப் பார்த்த விவசாயிகள் வயிற்றிலும் வாயிலும் அடித்து கதறியுள்ளனர். 

வாய்க்கால் வெட்டும் பணிக்காக தற்போது விவசாய நிலத்தை கூறு போட்டதை கேள்விப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள், பா.ம.க. உள்பட சில அரசியல் கட்சி நிர்வாகிகள் போராடுவதற்கு தயார் நிலையில் நின்றனர். ஆனால் இதனை முன்னரே அறிந்ததைத் தொடர்ந்து போராட்டத்தை தடுக்கும் வகையில் சுமார் 400 போலீசார் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் வேடிக்கை பார்த்த விவசாயிகள், செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர்.

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில், பண்ருட்டி - நெய்வேலி சாலையில் உள்ள கொஞ்சிக்குப்பம் பகுதியில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல், விருத்தாசலம், சேத்தியாதோப்பு, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் டயரை தீ வைத்து எரிக்கப்பட்டதால், தற்போது பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிக்க || என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்... அரசு பேருந்து மீது கல் வீச்சு!!

இதனிடையே, கால்வாய் தோண்டும் பணியால் பாதிக்கப்பட்டுள்ள 74 விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என ஆட்சியர் தம்புராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மின்சார உற்பத்தி 800 மெகாவாட் வரை குறைந்துள்ளதால், சுமார் 30 ஹெக்டேர் நிலம் என்எல்சி நிர்வாகத்திற்கு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தற்போது கால்வாய் தோண்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், நிலத்திற்கு பணம் கொடுக்கும் போதே, என்எல்சி நிர்வாகம் நிலத்தை கையகப்படுத்தி இருந்தால் தற்போது பிரச்சனை ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ள ஆட்சியர் அருண் தம்புராஜ், கடந்த டிசம்பர் மாதமே விளை நிலங்களை பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க || திருச்சியில் வேளாண் சங்கமம் 2023... தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!!