தடைக்குள்ளான வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு

ரிசர்வ் வங்கி இடைக்கால தடை விதித்துள்ள வங்கிகளின் வாடிக்கையாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டால், 90 நாட்களுக்குள் 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

தடைக்குள்ளான வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5 லட்சம் பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு

இந்தியாவில் செயல்பட்டு வரும் வங்கிகளின் செயல்பாடு, நிதிநிலை மற்றும் தவறான நிர்வாகம் ஆகியவற்றை பொறுத்து, வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் 35 மற்றும் 45 பிரிவுகளின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி இடைக்கால தடை விதிக்கலாம். கடந்த 1999ஆம் ஆண்டு முதல், இதுவரையில் 12 வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் தடை செய்யப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை இந்த நடவடிக்கைக்கு ஆளாகின.

இந்த தடையால், குறிப்பிட்ட வங்கியானது கடன் வழங்குதல், கடனைத் திரும்பப் பெறுதல், முதலீடுகள் உள்ளிட்ட எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படும் போது, வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகம் சார்பில் 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் பணம் வழங்கப்படும் என்று, டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.