"டிவி-டி1" சோதனை ராக்கெட்டின் சோதனை ஓட்டம்!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் 'டிவி-டி1' என்ற சோதனை ராக்கெட்டின் சோதனை ஓட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சரித்திரம் படைத்தது. அதைத்தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது.

இந்த உத்வேகத்துடன், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்ட செயல்பாடுகளை இஸ்ரோ துரிதப்படுத்தி உள்ளது. பூமியின் தாழ்வு வட்டபாதையில் 400 கிலோ மீட்டா் உயரத்தில் ககன்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு, 3 நாட்கள் ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ககன்யான் திட்ட சோதனைகளுக்காக ஒற்றை நிலை கொண்ட 'டிவி-டி1' என்ற சோதனை ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 'crew module' கட்டமைப்பு பொருத்தப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. பூமியில் இருந்து 17 கிலோ மீட்டா் உயரத்துக்கு ராக்கெட் சென்றதும், 'crew module' பிரிக்கப்படும்.

பூமியை நோக்கி crew module வரும்போது, அதன் வேகத்தை குறைக்க parachute பயன்படுத்தப்படும். அதனால், மிதமான வேகத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் வங்கக்கடல் பகுதியில் 'crew module' பத்திரமாக தரையிறங்கும். இந்நிலையில் 'டிவி-டி1' என்ற சோதனை ராக்கெட்டின் சோதனை ஓட்டம் இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளது.