அரை மணி நேரம் பிரதமரை காக்க வைத்த மம்தா: கோபத்தில் தலைமை செயலாளரை மாற்றிய மத்திய அரசு...

அரை மணி நேரம் பிரதமரை காக்க வைத்த மம்தா: கோபத்தில் தலைமை செயலாளரை மாற்றிய மத்திய அரசு...

பிரதமர் மோடி தலைமையிலான புயல் சேத ஆய்வுக் கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்த நிலையில், மேற்குவங்க மாநில தலைமைச் செயலாளரை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொண்டது. 

ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் யாஸ் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பிரதமர் மோடி நேற்று ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்தார். பின் பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் மேற்கு வங்க மாநிலம் கலைகுண்டா விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. 

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி குறிப்பிட்ட நேரத்திற்கு வந்துவிட்ட நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  தலைமை செயலாளர் மற்றும் மாநில அரசு சார்பில் பங்கேற்க வேண்டிய அதிகாரிகள் அனைவரும் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்துள்ளனர். மேலும் புயல் பாதிப்பு தொடர்பான தரவுகள் மற்றும் விவரங்களை அடங்கிய கோப்புகளை பிரதமர் மோடியிடம் வழங்கிவிட்டு முதல்வர் மம்தா கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதாக கூறப்படுகிறது. 

இது பாஜக-வினரை ஆத்திரமடைய செய்துள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் பலரும் மம்தாவின் செயலுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த எதிரொலியாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாவை மத்திய அரசு மீண்டும் அழைத்துக் கொண்டுள்ளது.

4 நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த அவரது பதவிகாலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த ஆணையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கள்கிழமை டெல்லியில் உள்ள பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.